சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் ரவுடி பினு. இவர் மீது கொலை, ஆள்கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இன்று அவர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு ஒரு வழக்கில் சிக்கி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார் பினு. அதில், மாங்காடு காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் ஜாமீனில் வந்த பினு அதன் பின்னர் மாங்காடு போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்திட வரவில்லை. அவர், தலைமறைவாகிவிட்டது தெரிந்தது. அதனையடுத்து, பினுவைக் கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மீண்டும் சென்னை எழும்பூரில் வைத்து ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளிகளைப் போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
அதன்பின் ஜாமீனில் வெளியே வந்த பினு, அவர் மீதான வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துவந்தார். இந்நிலையில், எஸ்.ஐ. முரளி, எஸ்.எஸ்.ஐ. பிரகாசம், எஸ்.எஸ்.ஐ. கிருஷ்ணகுமார், காவலர்கள் தேவராஜ், தங்கபாண்டி ஆகியோர் அடங்கிய நுங்கம்பாக்கம் தனிப்படை போலீசார், இன்று போரூர் அருகே பினுவைக் கைதுசெய்தனர். தொடர்ந்து அவரை சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சூளைமேடு காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.