அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பணியில் இருந்த மருத்துவ உதவியாளருக்குப் படுகாயம் ஏற்பட்டு, நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ள சம்பவம் பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது. நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரியில் 1952ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழங்கால கட்டடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கிவருகிறது. மிகவும் பழுதடைந்திருக்கும் இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்களும், மருத்துவப் பிரிவினரும் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர்.
ஆனாலும் அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. இந்தச் சூழலில் கட்டடத்தின் மேற்கூரை அடிக்கடி இடிந்து விழுந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று (25.08.2021) கட்டடத்தின் மேற்கூரை பெரிய அளவில் பெயர்த்துக்கொண்டு இரவு பணியில் மருத்துவ உதவியாளராக இருந்த நீலாவதி என்பவரது தலையில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அக்கம்பக்கத்தினர் நீலாவதியை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் திட்டச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.