திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தில் இருந்து ஜம்னாமத்தூர் செல்லும் மலைச் சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்டது. இந்தச் சாலையில் ஏப்ரல் 23ஆம் தேதி காலை விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. காலை 11 மணியளவில் ஆலங்காயம் டூ காவலூர் சாலையில் ஆர்.எம்.எஸ் புதூர் அருகே நொசகுட்டை என்ற இடத்தில் லாரி ஒருப்பக்கமாக சாய்ந்து ரோட்டில் கவிழ்ந்தது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் மலைச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பழைய சாலையை அகற்றிவிட்டு புதியசாலை அமைக்க வேண்டும் என்பது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் உத்தரவு. அப்படி இங்கு செய்யாமல் ஏற்கனவே இருந்த தார்சாலையின் மீது புதிய தார்சாலை அமைக்கப்பட்டதால் ஒரு அடிக்கும் அதிகமாக பக்கவாட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தார்ரோட்டில் இருந்து தவறி மண்சாலையில் வாகனம் இறங்கிவிட்டால் மீண்டும் மேலே ஏற்றுவதற்கு வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமமாக இருந்துவருகிறது. இதனை மண்ணைக் கொட்டி தற்காலிகமாக சரிச்செய்யுங்கள் என அந்தச் சாலையை பயன்படுத்தும் அப்பகுதி கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துவந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை மழை பெய்துவருகிறது. அப்படி மழை பெய்யும் நாட்களில் இந்தச் சாலையில் சென்ற பலர் கீழே விழுந்துள்ளனர். அதில் அவர்களுக்கு அடியும் பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது கோபத்தில் இருந்தனர்.
இந்நிலையில் தான், விவசாயிகளிடமிருந்து நெல் ஏற்றிச்சென்ற லாரி கீழே விழுந்துள்ளது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் ஆத்திரமடைந்தது சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். இதனால் மலைப்பாதையில் ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் தேங்கி நின்றது. இதனால் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் வருகை தந்து விரைவில் இந்தச் சாலையை சரி செய்துவிடுகிறோம் என வாக்குறுதி தந்தபின்பே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.