முத்தாரம்மன் கோவில் தசரா விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரபலமான குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழாவில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 7, 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கோவிலில் பக்தர்கள் வழிபாட்டுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். தங்குவதற்கு அனுமதியில்லை. பக்தர்கள் தேங்காய், பூ, பழம் என எந்த பொருட்களையும் எடுத்து வர அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் பக்தர்கள் வேடமணிந்து கோவில் பகுதிக்கு வரவும் பூஜைகளை அமர்ந்து பார்க்கவும் அனுமதி இல்லை. கோவில் அருகே உள்ள கடற்கரைப் பகுதியில் தங்குவது, கடைகள் அமைப்பது, கடற்கரைகளில் நிகழ்ச்சிகள் நடத்துவது போன்றவற்றிற்கு அனுமதி இல்லை. அக்டோபர் 15-ஆம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கடற்கரையில் நடைபெறாமல் கோவில் பிரகாரத்தில் நடத்தப்படும். மேலும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவின் பதினோராவது நாள் தசரா திருவிழா யூடியூப் இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.