அ.தி.மு.க.வில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், 'நமது அம்மா' நாளிதழ் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா' நாளிதழின் நேற்றைய பதிப்பில் நிறுவனர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என பெயர் இருந்த நிலையில், இன்று (26/06/2022) வெளியான 'நமது அம்மா' நாளிதழில் நிறுவனர் பொறுப்பில் இருந்து அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இன்று வெளியான அந்த நாளிதழில் 'நமது அம்மா' நாளிதழின் நிறுவனர் எடப்பாடி பழனிசாமி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் இடம் பெறவில்லை.
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் அலுவலகங்களில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் படம் அகற்றப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து என்னை யாராலும் நீக்க முடியாது என ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியிருந்த நிலையில், நமது அம்மா நாளிதழ் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டிருப்பது அவரது தரப்பு ஆதரவாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.