Skip to main content

குடியரசு நாளில் கிராமசபைக் கூட்டம் நடத்துவது குறித்து முடிவெடுத்தபின் தெரிவிக்கப்படும்! - தமிழக அரசு விளக்கம்!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

republic day grama sabha meeting tn govt and political parties high court

 

குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டத்தை நடத்துவது குறித்து இன்னும் அரசு முடிவெடுக்கவில்லை என்றும், சூழலைக் கருத்தில்கொண்டு, கிராம சபைக் கூட்டம் நடைபெறுமா என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்றும், தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் பஞ்சாயத்து சட்டப்படியும், கிராம சபைக் கூட்ட விதிகளின்படியும், ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என ஆண்டுக்கு நான்கு முறை, கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், கடந்த ஆண்டு கரோனா தொற்றைக் காரணம் காட்டி, அக்டோபர் 2-ஆம் தேதி நடக்க இருந்த கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.

 

இதை எதிர்த்து, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.என் நேரு தாக்கல் செய்த மனுவில், ‘சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு, தேசிய அளவில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுவதால், அச்சட்டங்களுக்கு எதிராக கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றும்படி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்ததாகவும், அதன் காரணமாகவே தமிழக அரசு கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்துள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.

 

அதே போல, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச்செயலாளர் மவுரியா தாக்கல் செய்திருந்த மனுவில், கிராமங்களின் நிர்வாகம், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்க கூட்டப்படும் கிராம சபைக் கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், எந்த முக்கியக் காரணமும் இல்லாமல் கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்தது சட்டவிரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

கிராம சபைக் கூட்டங்கள் கூட்டப்படுவதை உறுதி செய்ய, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர் ராஜகோபால், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் கோரினார்.

 

அப்போது, மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியம், ஏற்கனவே அக்டோபர் 2-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 26-ஆம் தேதி நடத்தப்பட வேண்டிய கிராம சபைக் கூட்டம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை என்பதால், வரும் திங்கள் கிழமை (25ஆம் தேதி) இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும், அதற்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.

 

அப்போது தமிழக அரசு சார்பில், சூழலைப் பொறுத்து வரும் 26-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டுமா, வேண்டாமா என்பது முடிவு செய்யப்படும் எனவும், அதுகுறித்து விரைவில் முன் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். அரசின் வாதத்தை தொடர்ந்து, வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்