தமிழ்நாட்டில் அதிகமாக விளையும் தேங்காய் மற்றும் தென்னை சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. ஆனால் ரேசன் கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் வழங்கப்படுகிறது. ஆகவே உள்ளூர் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யவும், தேங்காய் சார்ந்த மதிப்புக் கூட்டுப் பொருட்களை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யவும் வலியுறுத்தி பல வருடங்களாகத் தேங்காய் உற்பத்தி விவசாயிகள் தேங்காய் உடைப்பு போராட்டம் முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில்தான் இதே கோரிக்கையை வலியுறுத்தி 16 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள தென்னை விவசாயிகள் சென்னையில் திரண்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக விவசாயிகளை ஒன்று திரட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் எதிர்வரும் 16 ஆம் தேதி சென்னையில் நடக்கும் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்வது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கீரமங்கலம் சுற்று வட்டார கிராம தென்னை விவசாயிகளை ஒருங்கிணைத்து தொடங்கப்பட்ட நக்கீரர் தென்னை உற்பத்தி நிறுவனம் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பிய நிலையில், நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான செல்வராஜ் கூறும்போது, நக்கீரர் பண்ணை நட்டத்தில் இயங்கவில்லை. ரூ. 50 லட்சம் நிதி ஒரு தனி நபரிடம் உள்ளது. அதில் சுமார் ரூ. 20 லட்சம் வரை கடன் உள்ளது என்றார். இந்த நிறுவனம் மீண்டும் செயல்படுவது சம்பந்தமாக ஆலோசிக்க வேண்டும் என்றனர் பல விவசாயிகள். தற்போது நக்கீரர் பண்ணை பற்றி ஆலோசிக்க வேண்டாம். சென்னை போராட்டம் முடிந்தவுடன் விரைவில் இதேபோல கூட்டம் ஏற்பாடு செய்து ஆலோசித்து மீண்டும் நிறுவனம் இயங்க நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவானது.