நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஏழு கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 35 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. 12 மக்களவைத் தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்றது. இதனால் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக மாறியது.
ஒரு அரசியல் கட்சி இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில் நாம் தமிழர் கட்சி 8.22 சதவீத வாக்குகளைப் பெற்றதால் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக உருவெடுத்தது.
இதேபோல திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுத்து இருந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை எடுத்ததால் அங்கீகாரம் பெற்ற கட்சியாக உருவெடுத்திருந்தது. இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக விசிக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசிகவிற்கு தேர்தல் சின்னமாக பானை சின்னத்தை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.