கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழக எல்லைக்குள் வந்தது விஸ்வ இந்து பரிஷத்தின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத யாத்திரை செல்லும் வழி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து 6 மாநிலங்களைக் கடந்து ராமேஸ்வரம் வரை ராமராஜ்ய ரதயாத்திரை நடைபெறுகிறது. கடந்த 13ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை பல்வேறு பகுதிகளின் வழியாக இன்று தமிழக எல்லைக்குள் வந்தது.
முன்னதாக, தமிழகத்திற்கு வருகைதரும் ரதயாத்திரையை மறிக்கப் போவதாக சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அறிவித்ததையடுத்தது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெல்லை மாவட்டத்தில் வருகிற 23ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, ரதயாத்திரையை எதிர்த்து போராட்டத்திற்கு செல்ல முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இதேபோல், ரதயாத்திரையை எதிர்த்து போராட்டத்திற்கு செல்ல முயன்ற மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, பெரியார் திராவிடர் கழக நிறுவனர் ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால், செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.