Skip to main content

'குற்றவாளிகளை காப்பாற்ற துடித்தது தான் பழனிசாமி செய்த கேவலமான சாதனை'-அமைச்சர் ரகுபதி காட்டம்

Published on 14/05/2025 | Edited on 14/05/2025
'Trying to save the criminals was Palaniswami's heinous feat' - Minister Raghupathi angry

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி நந்தினி தேவி நேற்று (13.05.2025) காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கினார். அதில், “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தண்டனை விவரம் 12 மணிக்கு வழங்கப்படும்” என்ற அதிரடித் தீர்ப்பை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து நன்பகல் 12.30 மணியளவில் குற்றவாளிகள் 9 பேருக்கும் தனித் தனியாக தண்டனை விவரங்கள் வாசிக்கப்பட்டது. அதில், “9 குற்றவாளிகளும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

admk

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் 9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது குறித்து அ.தி.மு.க நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், ‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும் தண்டனைகளை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இந்த வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி இன்று கிடைக்கப்பெற்றுள்ளது. திமுகவைப் போல் அரசியலுக்காக அவதூறுகளை அள்ளித் தெளிக்கும் அற்ப புத்தி எங்களுக்கு இல்லை. எங்களுக்கு மடியில் கணமில்லை; வழியில் பயமில்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றினோம்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

dmk

இந்நிலையில் அமைச்சர் ரகுபதி,  எடப்பாடி பழனிசாமி மீது  குற்றச்சாட்டுகளை முன் வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 'அதிமுகவை சேர்ந்தவர்கள் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்பில் இருந்தார்கள் என்று அறிந்தவுடன் அவர்களை காப்பாற்ற எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பித்தலாட்டங்களுக்கு அளவில்லை; மூடி மறைக்க மேற்கொண்டு முயற்சிகளுக்கும் கணக்கில்லை. பச்சை பொய்கள் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமி தான் என்பதை தமிழ்நாடு மக்கள் நன்கு அறிவார்கள். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு கிடைத்ததற்கு வெட்கமே இல்லாமல் நான் தான் காரணம் என்று பெருமை பேசுகிறார். உண்மையில் வழக்கு கூட பதிவு செய்யாமல் குற்றவாளிகளை காப்பாற்ற துடித்தது தான் பழனிசாமி செய்த கேவலமான சாதனை. இதுபோன்ற பித்தலாட்டத்தை தான் முதலமைச்சர் சுட்டிக்காட்டி பேசியதும் ஓடோடி வந்து அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

பொள்ளாச்சி வழக்கில் கிடைத்திருக்க கூடிய தீர்ப்பில் திமுகவிற்கு என்ன பங்கு உள்ளது என கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி. திமுக தலைமை இந்த பிரச்சனையை கையில் எடுத்திருக்காவிட்டால் 2021 வரை இந்த லீலைகளை அதிமுக நிர்வாகிகள் நடத்தி இருப்பார்கள். இன்னும் ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இந்த தீர்ப்புக்கு திமுக காட்டிய உறுதிபாடும் போராட்டம் குணம் தான் வெற்றிக்கு காரணம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். டெல்லியில் பதுங்கி பதுங்கி அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி எதற்காக சந்தித்தார் என பச்சை குழந்தைகளுக்கும் தெரியும். அதனை அறியாமல் பச்சை பொய்களை அடித்து விட்டு கொண்டு இருக்கிறார். ஒன்றிய அரசின் ரெய்டு நடவடிக்கைகளால் தனக்கோ, தன் மகனுக்கோ, சம்மந்திக்கோ பாதிப்பு வந்துவிடக்கூடாது, மனம் சொத்துகள் முடக்கப்பட்டு விடக்கூடாது என்ற பயத்தில் தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்.

திமுக, மக்களிடம் பெற்று வரும் பேராதரவால் தன்னிலை இழந்து என்ன செய்வது என அறியாமல் மனம் போன போக்கில் பேசி வருகிறார். இரண்டு ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை டெல்லியில்  அடகு வைத்து விட்டு வந்த பழனிசாமிக்கு மாநில உணர்வு என்று சொல்வதற்கு தகுதி இல்லை. பழனிசாமியின் கபட நாடகங்கள் எந்த காலத்திலும் தமிழகம் மக்கள் மத்தியில் வெற்றி பெறாது. படுதோல்வி பழனிசாமி என்ற அடையாளம் மாறப்போவதில்லை'' எனக் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.

சார்ந்த செய்திகள்