
தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் புதுக்கோட்டை மாவட்ட கூட்டம் அறந்தாங்கியில் மாவட்டத் தலைவர் ராஜேஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர் வீரமுத்து, மண்டலச் செயலாளர் நாகலெட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் ராசேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட 108 தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், நிர்வாகத்தின் விரோதப் போக்கால் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்து பேசினர். கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் 1300, 108 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் சுமார் 7 ஆயிரம் பணியாளர்கள் பணி செய்கின்றனர். பணியாளர் குறைப்பு நடவடிக்கைக்காக சமீப காலமாக அனைத்தையும் ஆன்லைன் ஆக்கி உள்ளனர். இதில் சிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு வரும் அழைப்புகளை சரியாக கணிக்க முடியாம் தூரமாக உள்ள 108 க்கு தகவல் போகிறது. இதனால் ஆபத்தான நிலையில் உள்ள பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் சேவை கிடைக்கப்படுவதில்லை. ஆகவே தரமான கருவிகளை பொருத்திச் சரியான இடங்களுக்கு அழைப்புகள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
108 ஆம்புலன்ஸ்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவதில் தாமதம், வாகனங்களில் பழுது நீக்கப்படாமல் பொது மக்கள் பாதிப்பு என்று சொல்லும் போது பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை திரும்ப பெற வேண்டும். மேலும் டீசல் நிரப்ப உருவாக்கப்பட்டுள்ள செயலியில் பதிவேற்றம் செய்து அனுமதி பெற தாமதம் ஆவதால் டீசல் நிரப்பிச் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்ட 108 நிர்வாக அதிகாரிகளின் பணியாளர் விரோத போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் அறந்தாங்கி தாலுகா சுப்பிரமணியபுரம் மற்றும் புதுக்கோட்டை பாலன் நகரில் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.