திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கரந்தமலை பகுதியில் பரவியுள்ள வினோத எறும்புகள் வனவிலங்குகளை கொள்வதால் மக்கள் பீதியில் உள்ளனர். மலை அடிவார கிராம மக்கள் வீடுகளை காலி செய்து வேறு ஊர்களுக்கு குடி பெயர்கின்றனர்.
இந்த எறும்புகளால் நத்தம் கரந்தமலையை சுற்றி உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டுப்பட்டி, ஆத்திப்பட்டி, துவராபதி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் புதிய வகை வினோத எறும்புகள் மலை அடிவாரங்களில் பரவி, நாளடைவில் கரந்தமலை வனப்பகுதி முழுவதும் பரவின. தற்போது மலையைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் பரவத் தொடங்கியுள்ளது.
இந்த அரிய வகை எறும்புகள் மனிதர்கள் உடலில் வேகமாக ஏறுகிறது. குறிப்பாக இவை கண்களை மட்டுமே பதம் பார்க்கின்றன. உடலில் ஏறுவதால் அலர்ஜி கொப்பளங்கள் ஏற்படுகின்றன. இந்த எறும்புகளால் வனப்பகுதியில் உள்ள பாம்பு, முயல் போன்ற வனவிலங்குகள் பல இறந்து விட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர். காட்டு மாடு போன்ற பெரிய வனவிலங்குகளின் கன்றுகளையும் இந்த எறும்புகள் தாக்கி அழிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் விவசாயிகளின் கால்நடைகளின் கன்றுகளை கொல்கின்றன. குறிப்பாக ஆடு மாடுகளின் கண்களைச் சுற்றி கடித்து காயங்கள் ஏற்படுவதால், உயிரிழப்பும் ஏற்படுகிறது. எறும்புகள் பரவி உள்ள மலை அடிவார விவசாய நிலங்களில் வசிக்கும் விவசாயிகள் வீடுகளை காலி செய்து விட்டு வேறு பகுதிகளுக்கு குடிபெயர்கின்றனர். இது ஒரு அரியவகை எறும்பாக உள்ளது. இது போன்ற வகை எறும்புகளை இதுவரை இப்பகுதி மக்கள் கண்டதில்லை என கூறுகின்றனர். இந்த வகை எறும்புகள் அசுர வேகத்தில் பரவி வருகின்றன. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று வனத்துறையினர் அந்த எறும்புகளை ஆய்விற்காக பெங்களூருக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.