தனக்கு எதிரான ஆள்கடத்தல் வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி தடா ரஹீம் தாக்கல் செய்த மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், தென்காசியில் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் தன்னை கடத்தி, பணம் கேட்டு துன்புறுத்தியதாக திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த சையது முகமது புகாரி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் தடா ரஹீமை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தினர் கைது செய்து சிறையிலடைத்தனர். பின்னர் இந்த வழக்கின் அடிப்படையில் தடா ரஹீமை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
குண்டுவெடிப்பு வழக்கில் 1998 முதல் 2010 வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் 2007ல் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட இந்த பொய் வழக்கை திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் விசாரித்தால் நியாயமாக இருக்காது. அதனால் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி தடா ரஹீம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், 2 வாரங்களில் பதிலளிக்க டி.ஜி.பி., சென்னை காவல் ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.