ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டணம் மற்றும் தொண்டி ஆகிய பகுதியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக திருச்சியில் உள்ள சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு இன்று (10.03.2024) காலை ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் எஸ்.பி. பட்டணம் மற்றும் தொண்டி ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை எஸ்.பி. பட்டணம் கடற்கரை பகுதியில் உள்ள இறால் பண்ணை ஒன்றை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். அதே சமயம் இறால் பண்ணையில் இருந்த 2 பேர் அங்கிருந்து தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்தும், இறால் பண்ணையில் இருந்து தப்பி யோடிய இருவரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களா அல்லது இறால் பண்ணையில் வேலை செய்பவர்களா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் நாட்டுபடகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.