Skip to main content

விருதுநகர் அரசு மருத்துவமனையில் ‘ரமணா’ பட பாணியில் சிகிச்சை; தாயும் சிசுவும் இறந்ததால் சாலை மறியல்

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

'Ramana Cinema' style treatment at Virudhunagar Govt Hospital - mother and baby lost their, roadblocked

 

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவப் பிரிவில், தன் மனைவி முத்துமாரியும் பிரசவத்தின்போது சிசுவும் அடுத்தடுத்து இறந்தது தொடர்பாக, சிவகாசியைச் சேர்ந்த  பன்னீர்செல்வம் என்பவர் விருதுநகர் கிழக்கு காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

 

அதில்  ‘திருமணமாகி 14 வருடங்கள் ஆகிவிட்டன. என் மனைவி முத்துமாரிக்கு முதல் குழந்தை பிறந்து 1 மாதத்தில் இறந்துவிட்டது.  பின்பு 10 வருடங்கள் கழித்து கருவுற்று,  கடந்த 22 ஆம் தேதி சிவகாசி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறப்பதற்கான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென்று கூறியதால், அரசு ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் குழந்தையும் தாயும் இறந்துவிட நேரிடும் என்பதால் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்க்குமாறு நானும் என் குடும்பத்தினரும் முறையிட்டோம். அதற்கு மருத்துவர்கள், ‘ஒன்றும் கவலைப்பட வேண்டாம். சுகப்பிரசவம் ஆகிவிடும்.’ என்றார்கள்.

 

'Ramana Cinema' style treatment at Virudhunagar Govt Hospital - mother and baby lost their, roadblocked

 

மருத்துவப் படிப்புக்காக 5 மருத்துவர்கள் கையை விட்டதில் நஞ்சுக் கொடி - குடல் அறுந்ததில் கருவில் உள்ள குழந்தை இறந்துவிட்டது. அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டு இறந்த குழந்தையைக் கொடுத்துவிட்டு என் மனைவி முத்துமாரி உயிருடன் இருப்பதாக ரமணா சினிமா பாணியில் கூறினார்கள்.  வாயில் மூக்கில் பஞ்சு வைத்த நிலையில், ஆக்சிஜன் குளுக்கோஸ் ஏற்றுவதாக பொய் நாடகம் நடத்தினார்கள். பிறகு 10 பாக்கெட் ரத்தம் ஏற்றுவதாகக் கூறியவர்கள் என் மனைவியின் அருகில் யாரையும் விடவில்லை. மாலை 4 மணிக்கு முத்துமாரி இறந்துவிட்டதாகச் சொன்னவர்கள், அப்போதும் பார்க்க விடவில்லை. கிழக்கு வாசல் வழியாக என் மனைவியின் உடலைக் கடத்திச்சென்று பிணவறையில் வைத்துவிட்டனர்.  

 

முறையான மருத்துவம் மேற்கொள்ளப்படாமல், என் மனைவி மற்றும் குழந்தையைக் கொலை செய்த மருத்துவர்கள் மற்றும் தலைமை மருத்துவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பிரேதப் பரிசோதனையை வேறு மாவட்டத்திலுள்ள மருத்துவர்களை அழைத்து, மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் ஆர்.டி.ஓ. தலைமையில் நடத்த வேண்டும். இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார் பன்னீர்செல்வம்.  

 

'Ramana Cinema' style treatment at Virudhunagar Govt Hospital - mother and baby lost their, roadblocked

 

தாயும் சிசுவும் இறந்ததைத் தொடர்ந்து, அவருடைய உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.  கூடுதல் எஸ்.பி. மணிவண்ணன் மற்றும் டி.எஸ்.பி. அர்ச்சனா பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர். உரிய விசாரணை நடத்துவதாக உறுதியளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. மேலும், விருதுநகர் வந்திருந்த டிஜிபி சைலேந்திரபாபுவிடமும் பன்னீர்செல்வம் புகார் அளித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்