Skip to main content

3 நாடுகள் பயணத்தில் ரூ.8830 கோடி முதலீடு: தமிழக அரசுக்கு வாழ்த்துகள்! ராமதாஸ் 

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

 

3 நாடுகள் பயணத்தில் ரூ.8,830 கோடி முதலீடு செய்வதற்கான 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. முதலீடுகளை திரட்டியதற்காக  முதலமைச்சருக்கு பா.ம.க  சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

ramadoss



இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் போது, தமிழ்நாட்டில் ரூ.8,830 கோடி முதலீடு செய்வதற்கான 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தமிழகத்தில் கணிசமான எண்ணிக்கையில் வேலைவாய்ப்பை  ஏற்படுத்தும் வகையில் இந்த அளவுக்கு முதலீடு திரட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க சாதனையாகும்.


 

அமெரிக்காவிலும், துபாயிலும் நடைபெற்ற  முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பல பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து தமிழக அதிகாரிகளுடன்  தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இது தொழில்துறையில் நம்பிக்கையளிக்கும் முன்னேற்றம் என்பதில் யாருக்கும், எந்த ஐயமும் இல்லை. இவை தவிர லண்டனில் செயல்பட்டு வரும் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை சென்னையில் அமைக்க ஒப்பந்தமாகியிருப்பதும் வரவேற்கத்தக்கது. முதலீடுகளை திரட்டியதற்காக  முதலமைச்சருக்கு பா.ம.க  சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


 

உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார மந்தநிலை நிலவி வரும் சூழலில் முதலமைச்சரின் பயணத்தில் ரூ.8830 கோடிக்கு முதலீடுகள் திரட்டப்பட்டிருப்பதும், அதன்மூலம் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படுவதும் மகிழ்ச்சியளிக்கும் விஷயங்கள். இவை தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என்பது உறுதி. அந்த வகையில்  தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான தமிழக முதலமைச்சரின் 3 நாடுகள் பயணம் நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது.

 

 எனினும் அரசின் பணிகள் இத்துடன் முடிவடைந்து விடவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, அவை தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, தொழில் தொடங்குவதற்கு சாதகமாக தமிழகத்தில் உள்ள அம்சங்களை சந்தைப் படுத்தி அதன் மூலம் உலக அரங்கிலிருந்து கணிசமான அளவில் தொழில் முதலீடுகளைத் திரட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

அமெரிக்காவில் தமிழக மாணவி அதிரடி கைது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Tamil Nadu student arrested in America

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர்கள் அமைப்பினர், பொது மக்கள் பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், காசா போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று (25-04-24) காலை பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக விதிகளை மீறி இந்தப் போராட்டம், நடத்தப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹசன் சையத் மற்றும் மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதில், அச்சிந்தியா சிவலிங்கம், கோவை மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் படிக்கும் மாணவி ஆவர். இந்தக் கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.