Skip to main content

ஊழலை தட்டிக் கேட்டவர்களுக்கு சிறை: தமிழகத்தில் நடப்பது இடி அமீன் ஆட்சியா? ராமதாஸ் 

Published on 22/10/2018 | Edited on 22/10/2018
Ramadoss


 


தமிழகத்தில் ஊழல் நடக்காத துறை எதுவுமே இல்லை. ஊழலை தட்டிக்கேட்ட உள்ளூர் விழிப்புணர்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், தமிழகத்தில் நடப்பது இடி அமீன் ஆட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார். 
 

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

சென்னையை அடுத்த சிட்லப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான ஒப்பந்தம் வழங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்து வினா எழுப்பியதற்காக அப்பகுதியைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்த மக்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
 

சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் மழைநீர் வடிகால்களை அமைக்க மொத்தம் ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.12 கோடி மதிப்பிலான பணிகள் பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப் படும் நிலையில், ரூ.5 கோடி மதிப்புள்ள பணிகளை பேரூராட்சியே மேற்கொள்கிறது. சிட்லபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட சேதுநாராயணன் தெருவில் ரூ.1 கோடி மதிப்பிலான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப் புள்ளிகள் தாக்கல் செய்வதற்கு அக்டோபர் 17-ஆம் தேதி தான் கடைசி நாள் ஆகும். அதன் பின்னர் ஒப்பந்தப்புள்ளிகள் பரிசீலிக்கப்பட்டு, குறைந்த தொகைக்கு பணிகளை செய்ய முன்வந்தவருக்கு ஒப்பந்தம் வழங்கப்படும். அதன்பின்னர் பணி ஆணை வழங்கப்பட்டால் மட்டுமே மழைநீர் வடிகால்களை அமைக்கும் பணிகளைத் தொடங்க முடியும். ஆனால், ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிவதற்கு 20 நாட்கள் முன்பாகவே வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
 

அப்படியானால், இந்த பணிகளை செய்வதற்கான ஒப்பந்தத்தை ஒருவருக்கு வழங்குவதென முன்பே முடிவு செய்து விட்டு, பெயரளவில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன என்பதையும், இதன் பின்னணியில்  மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கக்கூடும் என்பதையும் உணர்ந்து கொண்ட ‘சிட்லப்பாக்கம் ரைசிங்’ என்ற உள்ளூர் விழிப்புணர்வு அமைப்பைச் சேர்ந்த சிலர் அதுகுறித்து அதிகாரிகளிடம் வினா எழுப்பி உள்ளனர். அதிகாரிகள் தரப்பிலிருந்து சரியான பதில் கிடைக்காத நிலையில், பணிகள் நடைபெற்று வந்த இடத்தை சிவக்குமார் என்பவர் அவரது செல்பேசியில் படம் பிடித்துள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த பேரூராட்சியின் உதவி செயற்பொறியாளர் மனோகர் என்பவர் செல்பேசியை பறித்துக் கொண்டார்.
 

இதுதொடர்பாக சிட்லப்பாக்கம் காவல்நிலையத்தில் ஊர்மக்கள் அளித்த புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்த காவல் ஆய்வாளர், செல்பேசியை மட்டும் மீட்டுக் கொடுத்துள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் சிட்லப்பாக்கம் ரைசிங் அமைப்பைச் சேர்ந்த 61 வயது முதியவர் குமார், பாலச்சந்திரன் ஆகிய இருவர்  கைது செய்யப்பட்டு, நேற்று காலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதும், சிவக்குமார், சுனில் ஆகிய மேலும் இருவர் மீதும் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் சிட்லப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் கொடுமை என்னவெனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவரான சுனில் பணி நிமித்தமாக பல நாட்களுக்கு முன்பே வெளிநாடு சென்றுள்ளார். இது பொய்வழக்கு என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவையில்லை. 
 

ஊழலை தட்டிக் கேட்ட மக்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வின் பின்னணியில் பெரிய சதி இருப்பதாகத் தெரிகிறது. அனைத்து உள்ளாட்சிகளிலும் நடப்பதைப் போலவே சிட்லப்பாக்கம் பேரூராட்சியிலும் ஒப்பந்தப் பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவரது பினாமிகள் மூலம்  எடுத்து செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அதை சிட்லபாக்கம் ரைசிங் அமைப்பினர் அம்பலப்படுத்தி விட்டதால் ஆத்திரமடைந்த அமைச்சர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மூலமாக அழுத்தம் கொடுத்ததால் தான் பாலச்சந்திரன், குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். மாவட்ட அளவில் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய மாவட்ட ஆட்சியர் பொன்னையா அமைச்சரின் முகவராகவே மாறி கையூட்டு வசூலித்துக் கொடுக்கும் பணியை செய்து வருவதாகவும்,  ஊழலை எதிர்ப்பவர்களை வழக்குப் போட்டு முடக்குவதாகவும் ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
 

 

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. ஊழல் நடக்காத துறை எதுவுமே இல்லை. ஆனால், உள்ளாட்சித் துறை அளவுக்கு வேறு எந்த துறையிலும் அப்பட்டமாக ஊழல் நடக்கவில்லை. ஒரு பணிக்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்படுவதற்கு முன்பாக அப்பணியை ஒருவருக்கு வழங்க முடிகிறது என்றால் உள்ளாட்சித் துறை ஒப்பந்தங்களை வழங்குவதில் அத்துறையின் அமைச்சரும், அவரது பினாமிகளும் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை அறியலாம். ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டது சிட்லப்பாக்கத்தில் மட்டும் நடந்த ஒன்றல்ல. தமிழகம் முழுவதும் உள்ளாட்சி ஊழல்களை எதிர்ப்பவர்களுக்கு இதே நிலை தான் ஏற்படுகிறது.
 

உகாண்டா ராணுவத் தளபதியாக இருந்த இடி அமீன் ராணுவ நிதியை கையாடல் செய்தார். இதற்காக  தம் மீது நாட்டு அதிபர் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டதை அறிந்த இடி அமீன் இராணுவப் புரட்சி செய்து அதிபரின் ஆட்சியைக் கவிழ்த்து தமக்குத் தாமே முடி சூட்டிக் கொண்டார். அதிபரான பிறகும் அவரது ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட அதே நிலை தான் தமிழகத்திலும் நிலவுகிறது. சர்வாதிகாரத்தின் உச்சத்தைத் தொட்ட இடி அமீனுக்கு ஏற்பட்ட நிலையை உலகம் அறியும். தமிழகத்து ஊழல்வாதிகளுக்கும் அதே நிலை ஏற்படப் போவது உறுதி.
 

தமிழகத்தின் ஆளுனர் மாளிகை இந்த அடக்குமுறைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா? என்பது தெரியவில்லை. சட்டத்தின் ஆட்சியை நடத்துவதில் ஆளுனருக்கு அக்கறை இருந்தால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் விடுதலை செய்ய அறிவுறுத்த வேண்டும். அத்துடன் உள்ளாட்சித்துறை ஊழல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆளுனர் ஆணையிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்