Skip to main content

‘கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள், சில மனிதர்கள்தான் சரியில்லை’ - நீதிமன்றம் கருத்து!

Published on 24/03/2025 | Edited on 24/03/2025

 

Court opinion thiruparankundram mountain issue

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இந்த 2 புனிதத் தலங்களிலும் ஏராளமான பக்தர்கள் தினமும்  வழிபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான், சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளைப் பலியிடப்பட்டு விழா நடத்தப்படும் எனத் தர்கா நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதே சமயம் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி திருப்பரங்குன்றத்துக்கு வந்த போது மலையில் அமர்ந்தபடி சிலர் அசைவ உணவுகளைச் சாப்பிட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பரவின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து, மலையின் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறி கடந்த பிப்ரவரி போராட்டம் நடத்த உள்ளதாக இந்து அமைப்பினர் அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இத்தகைய சூழலில், மதுரை மாவட்ட ஆட்சியர், 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்கிடையே,  உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அனுமதி அளித்ததன் பேரில், பா.ஜ.க உள்பட இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இத்தகைய சூழலில், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடை விதிக்கக் கோரியும், திருப்பரங்குன்றம் மலையை சிகந்தர் மலை என அழைக்க தடை விதிக்க வேண்டும் என்றும் பல்வேறு மனுக்கள் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.  

Court opinion thiruparankundram mountain issue

இந்த நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (24-03-24) நீதிபதி நிஷாபானு, ஸ்ரீமதி ஆகிய அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த மலை விவகாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை, அவரவர் தங்களது மத வழிபாடுகளில் செய்து வருகின்றனர். எனவே இந்த வழக்குகள் அனைத்து தள்ளுபடி செய்ய வேண்டும்’ என வாதிட்டார். இதனையடுத்து, ஒன்றிய அரசின் தொல்லியல் துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ‘1923ஆம் ஆண்டு இந்த மலை முழுவதும் ஒன்றிய அரசின் தொல்லியல் துறைக்கு கீழ் வந்துள்ளதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மலை ஒன்றிய அரசின் தொல்லியல் துறைக்கு சொந்தமானது. எனவே, அந்த மலையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது’ என வாதிட்டார்.

உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், “திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது. திடீரென இந்த மலை ஒன்றிய அரசுக்கு சொந்தமான மலை என்று சொல்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?. அனைத்து கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், சில மனிதர்கள் தான் சரியில்லை. எனவே, இது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. உங்களது நிலைபாடு என்ன? என்பது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுங்கள். அதன் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று தெரிவித்து இந்த வழக்கை வரும் ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

சார்ந்த செய்திகள்