தமிழ் வளர்த்த தவமுனி அகஸ்தியர், வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்து சமநிலை மாறிய புலன்களைச் சமன்படுத்தும் பொருட்டு சர்வேஸ்வரரான சிவபெருமானால் தென்புலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டவர். சிவபெருமானின் ஆக்ஞைபடி தென்புலம் வந்த அகத்தியர் தென்மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பொதிகையில் அமர்ந்தார். உலகம் சமனடைந்தது என்பது நம்பிக்கை.
அப்பேர்ப்பட்ட அகஸ்தியருக்கு, மேற்குத் தொடர்ச்சி மலையின் அம்பையின் பாபநாசம் மலையின் மேலுள்ள கல்யாண தீர்த்த மருகில் சிலை வைக்கப்பட்டது. அதனைபெயாட்டி கல்யாண தீர்த்தமும் உள்ளது. அருகே கொட்டும் சிற்றவிக்கு அகஸ்தியர் அருவி என்று பெயரும் வைக்கப்பட்டது.
மாதத்தில் வருகிற ஒவ்வொரு பௌர்ணமிக்கும், அகஸ்தியர் அருவியின் பக்கமுள்ள கோடி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வதுடன் சிறப்பான பூஜையும் நடத்துவர். காரணம், இரவு நேரங்களில் சித்தர்கள் கூடி, குறிப்பாக பௌர்ணமி இரவில் அவர்கள் சுவாமி தரிசனம் செய்த ஆலயம் என்றும் கருதப்படுவதால், பௌர்ணமியின் போது இம்மலைக்கோவில் களைகட்டும். இங்கே தரிசனம் செய்யும் பக்தர்கள் அருகிலுள்ள அகஸ்தியரையும் வழிபடுவர்.
ஜனவரி இரண்டாம் வாரம் பெய்த அடை மழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்தன. அதனால் பாபநாசம் அணையிலிருந்து 50 ஆயிரம் கன அடி நிர் திறந்துவிடப்பட்டு வெள்ளம் பாய்ந்தது. அத்துடன் மழை பொழிவின் காட்டாற்று வெள்ளமும் சேர, திகுடு முகடான வெள்ளம் பாய்ந்து கொட்டியதால், கல்யாண தீர்த்தமருகிலுள்ள கோடிலிங்கேஸ்வரரின் கோவில் சுற்றுச் சுவர் பகுதி இடிந்து சேதமடைந்திருக்கிறது. ஆலயத்தின் முன் பகுதியிலுள்ள உலோபாமுத்திர சமேத அகஸ்தியர் சிலைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மலைக் கோவிலின் படிகளும் சேதமடைந்ததால் நேற்றைய பௌர்ணமி பூஜைக்குப் பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
சரித்திரச் சிறப்புகொண்ட இக்கோயிலின் நடைப்பாதை வளாகம் சீரமைக்கப்பட வேண்டும், அகஸ்திய முனிவரின் சிலையும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.