தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று இரவு சென்னையில் பல இடங்களில் மிதமான மழை பொழிந்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 7 சென்டிமீட்டர் மழையும், தேனாம்பேட்டை, அயனாவரத்தில் தலா 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆவடியில் 6 சென்டிமீட்டர் மழையும், ஜமீன் கொரட்டூரில்-5.2 சென்டிமீட்டர் மழையும், திருத்தணி-5 சென்டிமீட்டர் மழையும், சோழவரம்-4.2 சென்டிமீட்டர் மழையும், செங்குன்றம்-4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.