உள்ளாட்சி தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் குயின் இணையதள தொடருக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து குயின் என்ற இணையதள தொடர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இணையதள தொடரை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைபடத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.
தற்போது தேர்தல் நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், இந்த குயின் இணையதள தொடருக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடந்த 9-ஆம் தேதி கோரிக்கை மனு அளித்திருப்பதாகவும்,அந்த கோரிக்கை மனுவைப் பரிசீலித்து குயின் இணையதள தொடர் வெளியிட தடைவிதிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.