நெல்லை மாவட்டம் மேலநத்தம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்ததால், ஆற்றில் தண்ணீர் கருநிறமாக ஓடுவது அந்தப் பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் எனப் பொதுமக்கள் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் முக்கிய நதிகளில் ஒன்றான தாமிரபரணி ஆறு, ஐந்து மாவட்டங்களின் நீர் தேவையையும், இரண்டு மாவட்டங்களின் விவசாய பாசன வசதியையும் பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் திருநெல்வேலியில் மேலநத்தம் பகுதியில் அனைத்து கழிவுநீர்களும் தாமிரபரணி ஆற்றில் நேரடியாக கலக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனால் தாமிரபரணி ஆற்றில் நீரின் நிறம் கருப்பாக மாறி உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் அந்தப் பகுதியில் ஆய்வுக்குச் சென்றனர்.
பொதுமக்களிடம் இது குறித்து கேட்டறிந்தனர். அப்போது பொதுமக்கள், தொடர்ந்து நீரில் கழிவுநீர் கலக்கப்படுவதால் கருப்பு நிறமாக வருகிறது. இது பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனப் பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.