நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.