தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்குக் காலாண்டு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அக்டோபர் 2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விடுமுறை அக்டோபர் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அக்டோபர் 7 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகப் பள்ளிக்கல்வி இயக்குநர் பிறப்பித்துள்ள ஆணையில், “பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து 07.10.2024 (திங்கட் கிழமை) அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் இன்று (25.09.2024) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை செயலாளரிடம் பேசி உள்ளேன். இது தொடர்பாக இன்று அறிவிப்பு வெளியாகும்” எனக் கூறினார். அதே சமயம் மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தக் கூடுதல் அவகாசம் வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.