டிடிவியின் தீவிர ஆதரவாளராக இருந்த புகழேந்தி கடந்த சில மாதங்களாகவே டிடிவி-க்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு ஊர் ஊருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக போட்டி கூட்டங்களை போட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்களையும், தொண்டர்களையும் தன் பக்கம் இழுத்து வருகிறார். இப்படி கட்சியை உடைத்து ஆதரவாளர்களை திரட்டி வரும் புகழேந்தி கூடிய விரைவில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைய இருக்கிறார்.

இந்தநிலையில் திண்டுக்கல் ஆலோசனை கூட்டத்திற்கு வந்த புகழேந்தி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது,
நடத்துனர் சிவாஜி ராவாக சென்னைக்கு வந்த ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மாறியது ஆச்சரியம் இல்லையா. பாஜக ரஜினிகாந்தின் வருகையை எதிர்பார்த்து ஏமாந்து தற்போது வாசன் தலைமையில் கட்சியை ஒப்படைக்க இருக்கிறது. அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள இயலாமல் ஆத்திரத்தில் ரஜினிகாந்த் உளறுகிறார். 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார். வழக்கம்போல நடிகர் ரஜினிகாந்த் கட்சியை துவக்காமல் இந்த அதிசயத்தை வேடிக்கை பார்ப்பார். எம்எல்ஏவாக, எம்பியாக அமைச்சராக 45 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக மீண்டும் வருவார் என்று கூறினார்.
பேட்டியின்போது நகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் உடனிருந்தனர்.