Skip to main content

பேருந்துக்குள் மோதிக் கொள்ளும் மாணவர்கள்... தொடர்ச்சியான பள்ளி மாணவர்கள் மோதலால் பதறும் புதுக்கோட்டை கிராமங்கள்

Published on 11/10/2018 | Edited on 11/10/2018

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் பேருந்துக்குள் மாணவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் 3 நடந்துவிட்டது. இந்த மாணவர்கள் பிரச்சனை கிராம பிரச்சனைகளாக உருவெடுத்துவிடும் முன் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் காவல்துறையும் கிராமத்தினரும்.

 

சம்பவம் 1 

 

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் தனியார் பேருந்து.. ஆலங்குடி கடந்து கல்லாலங்குடி நுழைவாயில் வரும்போது பேருந்துக்குள் இருந்த மாணவர்கள் இளைஞர்கள் திடீரென சிலரை தாக்க இருதரப்பும் தாக்கிக் கொள்கிறது.  இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கொத்தமங்கலத்தில் இரவிலும் சாலை மறியல் நடந்தது. அடுத்தநாள் கொத்தமங்கலத்திற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க முடியாது பாதுகாப்பு இல்லை என்று போக்குவரத்து நிரவாகம் முடிவெடுத்து பேருந்துகளை நிறுத்திவிட்டது. அதன் பிறகு இரு தரப்பிலும் ஆலங்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

SCHOOL

 

இது குறித்து சில போலிசார் கூறும் போது.. கொத்தமங்கலம் - பள்ளத்தி  விடுதி மாணவர்கள் மோதல் பலவருடங்களாக நடக்கிறது. இதனால் கிராம பிரச்சனை ஜாதிப் பிரச்சனை வரை போய்விட்டது. கடந்த ஆண்டு நடந்த தாக்குதல் சம்பவத்தில் சிலர் மீது வழக்கு போட்டதால் ஒரு வருடம் ஓய்ந்து மறுபடியும் தலைதூக்கிவிட்டது. இரு கிராம பெரியவர்களும் இணைந்து பேசுங்கள் என்றால் எங்கள் பேச்சுக்கு கட்டுப்படல என்று பெரியவர்கள் ஒதுங்குகிறார்கள் என்றனர்.

 

 சம்பவம் 2: 

 

புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து கறம்பக்குடி நோக்கி புறப்பட்ட பேருந்துக்குள் ஏறிய சில மாணவர்கள் ஒரு மாணவனை சரமாரியாக தாக்குகிறார்கள். மற்ற பயணிகள் கூச்சல் போட்ட பிறகு இறங்கிச் சென்றார்கள். இந்த வீடியோ பதிவும் சமூக வலைதளங்களில் பரவியது. 

 

 சம்பவம் 3 :

 

புதுக்கோட்டையிலிருந்து வடகாடு செல்லும் தனியார் நகரப் பேருந்து ஆலங்குடி அரசமரம் அருகே வந்தபோது 4 மாணவர் பேருந்தில் ஏறி இரு மாணவர்களை சரமாரியாக தாக்க சக பயணிகள் சத்தம் போட்டதால் சாதாரணமாக இறங்கிச் சென்றனர். இந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வேகமா பரவுகிறது. இந்த சம்பவத்தில் சிக்கப்பட்டி- கட்ராம்பட்டி மாணவர்கள் மோதிக் கொண்டார்கள். அடுத்தடுத்த கிராமங்கள் இரு வேறு சமூகங்கள் என்பதால் ஒரு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

SCHOOL

 

இப்படி ஒரே வாரத்தில் 3 சம்பவங்களில் வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்டதால்  கிராம பிரச்சனைகள் வந்துவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. மேலும் ஜாதிகள் வேறு வேறாக இருப்பதால் அந்த பயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஜாதிய கருத்து மோதல்களும் உருவாகி காவல் நிலையம் வரை புகார் சென்றுள்ளது.

இந்த பிரச்சனைகளை இத்துடன் வளறாமல் தடுக்க கிராம பெரிவயர்களும், காவல் துறையும் இணைந்து ஒரு சுமூககமான முடிவை விரைந்து எடுக்கவில்லை என்றால் இந்த மாணவர்கள் மோதல் உச்சம் பெற்றுவிடும்.

 

மேலும் மாணவர்கள் பிரச்சனையை மாணவர்கள் பிரச்சனையாக மட்டுமே பார்க்க வேண்டும். மாறாக ஊர், ஜாதிப் பிரச்சனைகளாக அனுகினால் மோதிக்கொண்ட மாணவர்களுக்கு மேலும் துளிர்விட்டு மோதலை பெரிதாக்கிவிடுவார்கள்.

சார்ந்த செய்திகள்