புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது பொண்ணன்விடுதி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமையா மகள் புவனேஸ்வரி (வயது 24). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அவரது அத்தை மகனான பழனிராஜனுக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில் பழனிராஜன் நாகர்கோயில் அருகே நடத்தி வரும் குளிர்பான கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் பிறகுத் தனது காதலியான அதே ஊரைச் சேர்ந்த பிரபாவையும் அழைத்துச் சென்று நாகர்கோவிலில் குடும்பம் நடத்தத் தொடங்கியது புவனேஸ்வரிக்கு தெரியவந்தது. இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளதால் பழனிராஜன் ஊருக்கு வருவதைக் குறைத்துக் கொண்டார்.
திருமணமாகி ஒரு வருடத்திலேயே கணவன் தன்னை விட்டு வேறு பெண்ணுடன் சென்று விட்டதால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி தன் தந்தை வீட்டிற்குச் சென்ற தங்கியுள்ளார். நாளுக்கு நாள் மன உளைச்சல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று (20.08.2024) புவனேஸ்வரியை நீண்ட நேரம் காணாமல் உறவினர்கள் தேடிய போது அருகில் உள்ள கிணற்றில் சடலமாக மிதப்பது தெரியவந்தது. இதனையடுத்து மழையூர் போலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மூலம் சடலத்தை மீட்டனர். இந்த தகவல் அறிந்து பழனிராஜன் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்றுவிட்டனர்.
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட புவனேஸ்வரி சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்குக் கொண்டு போக ஆம்புலன்ஸ் வரத் தாமதமானதால் சடலத்தை அவரது கணவர் வீட்டு வாசலில் வைத்து பழனிராஜன் குடும்பத்தினர் மீது வரதட்சணை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப மறுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் புகார் மனுவை போலிசார் வாங்கிய பிறகே சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு போலிசார் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று (21.08.2024) மாலை பிரேதப் பரிசோதனை முடிந்து புவனேஸ்வரி சடலம் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்படும் தகவல் அறிந்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததால் கறம்பக்குடி காவல் ஆய்வாளர் ரவி தலைமையில், மழையூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மோகன், முருகேசன் உள்பட 26 போலிசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆம்புலன்சில் புவனேஸ்வரி சடலத்தை ஏற்றி நேராகக் கணவன் பழனிராஜா வீட்டிற்குக் கொண்டு வந்து வீட்டு வாசலில் தயாராக இருந்த விறகுக் கட்டைகளை அடுக்கி அதன் மேல் புவனேஸ்வரி சடலத்தை வைத்து தீ மூட்டிவிட்டனர். போலிசார் தடுக்க முயன்றும் தடுக்கமுடியவில்லை. இதனால் கணவன் வீட்டு வாசலிலேயே புவனேஸ்வரி சடலம் எரிந்து சாம்பானது. வீட்டு வாசலில் சடலம் எரிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து மேலும் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டு வாசலில் சடலம் எரித்த சம்பவத்தால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ள நிலையில் புதுக்கோட்டைக் கோட்டாட்சியர் விசாரணை செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒரு வீட்டின் வாசலில் சடலம் எரிக்க முயன்ற போது போலிசார் தடுக்கவில்லையா என்றும் யார் எல்லாம் சடலத்தை யார் எரித்தார்கள் என்றும் காவல் உயர் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். திருமணமான ஒரு வருடத்தில் மனைவியைத் தவிக்கவிட்டுச் சென்ற கணவன் வேறு திருமணம் செய்ததால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.