
திருச்சி அருகே உள்ள மாத்தூரை அடுத்த அரைவட்ட சாலையில் முட்புதரில் காரின் அருகில் ஒருவர் அப்பகுதியில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை அவ்வழியாக வந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் படுகொலையானவர், திருச்சி காஜாமலையை சேர்ந்தவர் பூபதி கண்ணன் (45) என்பதும், இவர் புதுக்கோட்டை கலெக்டர் தலைவர் கணேசனின் நேர்முக உதவியாளராக உள்ளார் என்பதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவரது அடையாள அட்டை மற்றும் செல்போன் உதவியுடன் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். அவரது மனைவியிடம் விசாரித்த போது பூபதி கண்ணன் நேற்று காலை அலுவலகத்திற்கு காரில் வழக்கம் போல் சென்றுள்ளார். மேலும் நேற்று மாலை அவர் பணி முடிந்து அலுவலகத்தில் இருந்து வெளியேறியவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி அனுராதா அவருடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவர் வெளியே இருப்பதாகவும், விரைவில் வீட்டுக்கு திரும்புவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பூபதி கண்ணன் மாத்தூர் அருகே உள்ள புதுக்கோட்டை தஞ்சை அரைவட்ட சாலையில் தலை, கழுத்து, மார்பு மற்றும் பின் தலை உள்ளிட்ட இடங்களில் அரிவாள் மற்றும் கத்தியால் குத்திய காயங்களுடன் ஆடைகள் களைந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் அவரது காரின் அருகில் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது சடலத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் நேரில் வந்து விசாரணை நடத்தினர். அரசு அதிகாரி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது குறித்தும், கொலையாளிகளை விரைந்து பிடிக்க மாத்தூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான 4 தனிப்படை அமைக்க எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

கொலையான பூபதி கண்ணனின் மனைவி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஊரக வளர்ச்சி துறையில் உதவி செயற்பொறியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு அதிகாரி மர்மமான முறையில் படுகொலை சம்பவம் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.