புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா பெருமருதூர் நாட்டாணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம்போல நேற்று (27/05/2020) ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்று அப்பகுதியில் உள்ள வயலில் மேய்த்துக் கொண்டிருந்த போது திடீரென மழை பெய்துள்ளது. மழை காரணமாக ஆடுகள் அப்பகுதியில் உள்ள புளிய மரம் ஒன்றின் கீழ் ஒதுங்கி நின்ற நிலையில், திடீரென கடுமையான மின்னலுடன் புளிய மரத்தின் மீது இடி விழுந்ததில் 16 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
சம்பவம் குறித்து மணமேல்குடி வட்டாட்சியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வருவாய்த் துறையினர் வந்து இடி தாக்கி இறந்த ஆடுகளைப் பார்வையிட்டனர். இந்தச் சம்பவத்தில் விவசாயி ஆறுமுகம் மழை பெய்தபோது ஆடுகளுடன் நிற்காமல் வேறு பகுதியில் நின்றதால் உயிர் தப்பினார்.
ஆறுமுகம் வளர்த்த 16 ஆடுகளும் ஒரே நேரத்தில் இடியால் உயிரிழந்தது அந்தக் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் விவசாயி ஆறுமுகத்திற்கு உரிய இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.