தென்காசி மாவட்டத்தின் சுரண்டை நகரம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேரூராட்சியாய் இருந்து வந்திருக்கிறது. அதனை நகராட்சியாக மாற்றவேண்டுமென்று மாவட்ட காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான பழனி நாடார் அரசுக்கு விடுத்த கோரிக்கையை அடுத்து சுரண்டை பேரூராட்சி, நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான அறிவிப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.
நகராட்சியாக உயர்த்தப்பட்டதால் அத்துடன் சுரண்டை சுற்று வட்டாரத்தின் 8 கி.மீ சுற்றளவிலுள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் இணைப்பது குறித்து மக்களிடம் ஒருபுறம் கருத்து கேட்பு கூட்டமும் நடைபெற்று வருகிறது. இதனிடையே சுரண்டையுடன் தங்களின் பேரூராட்சியை இணைக்கக் கூடாது, தங்களின் தனித்தன்மை போய்விடும் என்று சாம்பவர்வடகரை பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வாழ் பொதுமக்கள், வியாபாரிகள், பொதுநல அமைப்புகள், அனைத்து அரசியல் கட்சிகள் இணைந்து சாம்பவர்வடகரையை சுரண்டைப் நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தினர்.
அதற்காக தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இன்று ஒருநாள் மட்டும் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து ஏற்கனவே நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதன்படி இன்று நகரிலுள்ள 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.