
சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் புதிய இரண்டாவது விமான நிலையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிற நிலையில் பரந்தூர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து பரந்தூர் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அண்மையில் கூட சுற்றுவட்டார கிராம மக்கள் 'விவசாயத்தை அழித்து விமான நிலையமா?' என்ற பதாகைகளுடன் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் விமான நிலையத்துக்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 16 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோரிக்கைகள் அடங்கிய பாதாகைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக கிளம்பியுள்ளார்கள். இதன் காரணமாகப் போராட்டத்தில் ஈடுபட உள்ள மக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.