Skip to main content

'நெல்லை சிறை நிரப்பும் போராட்டம்'-தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கைது

Published on 09/07/2023 | Edited on 09/07/2023

 

20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளின் முன்பு சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் போராட்டம் இன்று நெல்லை மாவட்டம் சார்பில் பாளையங்கோட்டை சிறைக்கு முன்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

 

இதற்காக மாலை 5.30 க்கு நூற்றுக்கணக்கானோர் மேலப்பாளையம் சந்தை அருகே குழுமினர். நெல்லை பாளை சிறை நோக்கி அனைவரும் அணிவகுக்கத் தொடங்கிய போது காவல்துறை தொடக்கத்திலேயே தடுத்தது. இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கு இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையின் போக்கிற்கு பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பவானி வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்தார். மற்ற அமைப்புகளின் தலைவர்களும் காவல்துறை அணுகுமுறை சரியில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

 

இதனால் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி  மற்றும் பிற அமைப்புகள், கட்சிகளின் பிரதிநிதிகளும் மறியலில் அமர்ந்து கண்டன குரல் எழுப்பினர். அதற்குள் காவல்துறையில் சிலர் வருத்தம் தெரிவித்து அமைதிப்படுத்தியதும் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நெல்லை காவல்துறையில் உள்ள இரண்டு காவல்துறை அதிகாரிகள் உள்நோக்கோடு நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

 

இதில் ஷேக் மெய்தீன்  (பாமக ), பவானி  வேல்முருகன் ( பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகம்), திண்டுக்கல் ஜமால் ( IMMK) வழக்கறிஞர் ஆறுமுகராஜ் ( அகில பாரத விஸ்வகர்மா ) அம்ஜத்கான் (INL), நடராஜன்,( விசிக),  குலாம் மைதீன் ( தவாக), சகாபுதீன் ( முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம்), A.K. நெல்சன் ( புரட்சி பாரதம்), செல்வம் ( தகொஇபே),தமிழரசன் ( தமிழ் புலிகள்), கதிரவன் (திராவிடர் தமிழர் கட்சி), லெனின் கென்னடி (தமிழர் உரிமை மீட்பு கழகம்) உள்ளிட்ட கட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கைதாகினர். அடுத்த துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜுதீன் தலைமையில்  மஜகவின் முன்னணி நிர்வாகிகள் கைதாகினர்.

 


 

சார்ந்த செய்திகள்