Skip to main content

தனியார் நிலங்களில் விளம்பரப் பலகைகள்! -தடை விதித்த சட்டத் திருத்தம் ரத்து!

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

தனியார் நிலத்தில் விளம்பரப் பலகைகளை வைக்கத் தடை விதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 private lands billboards issue - chennai  High Court order

 



மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களில் மட்டுமே விளம்பரப் பலகைகள் வைக்கும் வகையில், தமிழ்நாடு மாநகராட்சிகள் சட்டத்தில் 2018-ம் ஆண்டு  திருத்தம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதியிலிருந்து இந்தச் சட்டம் அமலுக்கு வரும் எனவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதை எதிர்த்து சென்னை ஹோர்டிங்ஸ் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ஏ பி சாஹி மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்தது.

தனியார் நிலங்களில் விளம்பரப் பலகைகள் வைப்பதற்குத் தடை விதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தச் சட்டத்திருத்தம் தங்கள் தொழில் உரிமையைப் பாதிப்பதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. காளான் போல பெருகி வரும் விளம்பரப் பலகைகளை கட்டுப்படுத்துவதற்கு,  பொது நலனை கருத்தில் கொண்டு இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 



இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனியார் நிலங்களில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளைக் கண்காணிக்க மாநகராட்சி அதிகாரிகளால் இயலவில்லை என்ற காரணத்திற்காக, தனியார் நிலங்களில் விளம்பரப் பலகைகள் வைக்கத் தடை விதிக்க முடியாது எனக் கூறி, தமிழக அரசின் சட்டத் திருத்தத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

மாநகராட்சி நிலங்களில் மட்டும் விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதிப்பதன் மூலம் விதிமீறல்கள் நடைபெறாது என யூகிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விளம்பரங்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக ஒரு மாதத்தில் உரிய விதிகளைக் கொண்டுவரவேண்டும் எனவும் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்