புதுக்கோட்டையில் தனியார் பேருந்து கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு மணப்பாறை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அன்னவாசல் பகுதிக்கு முன்பாக உள்ள ஒன்றிய அலுவலக பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது பேருந்தின் முன்பக்கம் டயர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவில் குறுக்காக தலைகுப்புற கவிழ்ந்தது. அந்தப் பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அலறியடித்தபடி உள்ளே சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அன்னவாசல், இலுப்பூர், மணப்பாறை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து தகவல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு காவல்துறை வரவில்லை என அந்தப் பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். அதேபோல் பேருந்து அதிவேகமாக வந்ததால்தான் இந்த விபத்து நடந்தது என அங்குள்ள ஒரு சாரார் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.