Skip to main content

அஞ்சல் துறை தேர்வுகளைத்  தமிழில் நடத்தவேண்டும்;இல்லாவிடில் தமிழகம் மிகப்பெரிய போராட்டக்களமாக மாறும் -திருமா

Published on 13/07/2019 | Edited on 13/07/2019

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  ’’அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கு 1000 பணியிடங்களுக்கான தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் அந்தத் தேர்வுகளை எழுதவேண்டும் என்ற அறிவிப்பை மாற்றி வழக்கம்போலத் தமிழில் எழுத உத்தரவிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். 

 

ப்

 

அஞ்சல்துறைப் பணியிடங்களுக்கான தேர்வுகளைத் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில்   எழுதும் வசதி இதுவரை இருந்துவந்தது. கடந்த 2019 மே  16 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பிலும் பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம் என்றுதான் கூறப்பட்டிருந்தது. திடீரென்று  இப்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம் என மாற்றியுள்ளனர். 2019 ஜூலை மாதம் 11 ஆம் தேதிதான் இந்தப் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது மாபெரும் அநீதி மட்டுமல்ல மோசடியுமாகும். 

 

2016-17 ஆம் ஆண்டு தேர்வு நடைபெற்றபோது பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைவிட தமிழில் கூடுதலாக மதிப்பெண் பெற்றதாக அறிவிக்கப்பட்டு பணி வழங்கப்பட்டது. அதில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது பின்னர்  தெரியவந்தது. தற்போது அந்த மோசடி குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இப்போதும் தமிழ்நாட்டைச் சேராதவர்களை இங்கே பணி அமர்த்துவதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பது தெரிகிறது.

 

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் நாடாளுமன்றத்தில் ரயில்வே துறை மானியக் கோரிக்கைமீது பேசும்போது ரயில்வே துறை வேலைகளில் வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் திணிக்கப்படுவதைத் தடுக்கவேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்தினோம். இப்போது அஞ்சல்துறையில் இந்த அநீதி இழைக்கப்படுகிறது. மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். தமிழிலும் எழுத அனுமதிக்கவேண்டும். இல்லாவிடில் தமிழகம் மிகப்பெரிய போராட்டக்களமாக மாறும் என எச்சரிக்கிறோம். ’’

 

சார்ந்த செய்திகள்

Next Story

மும்பையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில்; 12 மணி நேரம் செயல்படும் மத்திய அரசு நிறுவனம்!

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

following mumbai in tamilnadu central government agency that operates for 12 hours
கோப்பு படம்

 

தொலைத்தொடர்பு வசதிகள் அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில் ஒரு தகவலை ஒரே நிமிடத்தில் உலகின் எதிர் திசையில் இருப்பவரிடம் கொண்டு சேர்க்க முடிகிறது. ஆனால், உலகமயமாக்கல் நிகழ்வதற்கு முன்பு வரை ஒரு தகவலை அடுத்த மாவட்டத்திற்கு எடுத்துச் செல்வது என்பதே பெரும் காரியமாக இருந்து வந்தது. அந்தக் காலங்களில் தகவல் பரிமாற்றத்திற்கு பெரும் உதவியாக இருந்தது தபால் துறை. அரசுத் துறையான தபால் துறை தொலைத்தொடர்பு வசதிகள் பெருகத் தகவல் பரிமாற்றத்தில் தேக்கம் கண்டது. ஆனால், மாறி வரும் காலச் சூழலுக்கு ஏற்ப மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை எளிதாக்க பல்வேறு முயற்சிகளை தபால் துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இணைய வங்கி சேவை, காப்பீடு வழங்குதல் போன்றவற்றை முன்னெடுத்து வருகிறது.

 

சமீபத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலைத் திட்டம் பலத்த எதிர்ப்புக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டது. மத்திய அரசு இந்த 12 மணி நேர வேலைத் திட்டத்தை முன்னெடுக்கத் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் 60 தபால் நிலையங்களில் 12 மணி நேரச் சேவைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு அது தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல்  முறையாக பகல் 12 மணி நேரமும் செயல்படும் வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் தபால் நிலையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இந்த தபால் நிலையமானது காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை அனைத்து சேவைகளும் பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

 

மேலும் வங்கி பரிவர்த்தனை சேவைகளான சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, பொது வருங்கால வைப்பு கணக்கு, குறித்த கால வைப்பு கணக்கு,  மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், மாதாந்திர வருமான கணக்கு, அடல் பென்ஷன் திட்டம், அஞ்சல் காப்பீட்டு பரிவர்த்தனைகள், தபால் சேவையில் பதிவு தபால், விரைவு தபால், பார்சல் சேவைகள், அயல்நாட்டு தபால் சேவை, விபிஎல், விபிபி தபால் சேவைகள், மணியார்டர் போன்ற சேவைகளும் 12 மணி நேரமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பெருகும் ஆதரவு; களத்திற்கு வந்த அமைப்புகள்

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

indian wrestlers related issue some organisation support trichy

 

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்று தந்த மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவரை பதவி நீக்கம் செய்வதுடன், அவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

இதன் தொடர்ச்சியாக, திருச்சியில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இணைந்து இன்று திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரும்பு தடுப்புகளை தாண்டி தபால் நிலையத்துக்கு உள்ளே செல்ல முயன்ற 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

 

இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் பாஜக எம்.பியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் விவசாயிகளைப் பாதுகாக்க விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை கொடுக்க வேண்டுமெனவும் பெண்களைப் பாதுகாக்க குற்றவாளிகளுக்கு துணைபோகாமல் தண்டிக்க வேண்டுமெனவும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தினர்.