சேலம் அஸ்தம்பட்டியில் பிரபல ரவுடியை ஆறு பேர் கும்பல் புதன்கிழமை இரவு சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அஸ்தம்பட்டி எம்டிஎஸ் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (40). அங்குள்ள அடைக்கலநகர் கிறிஸ்தவ தேவாலயம் அருகே தினமும் மாலை நேரத்தில் சில்லி மீன் கடை நடத்தி வந்தார். புதன்கிழமை (ஆகஸ்ட் 22, 2018) இரவும் வழக்கம்போல் வெங்கடேசன் தனது கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். இரவு 10 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வெங்கடேசனை, கத்தி மற்றும் அரிவாள்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். பல இடங்களில் வெட்டு விழுந்ததால் வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை மற்றும் அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 2011ம் ஆண்டு, சேலம் பெரிய புதூரைச் சேர்ந்த துரைசாமி என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலை வழக்கில் ரவுடி வெங்கடேசன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் இருந்து வெங்கடேசன் விடுதலை ஆனால்.
இதனால் துரைசாமியை கொலை செய்த வெங்கடேசனை பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்ட அவருடைய நண்பர்கள் சதித்திட்டம் தீட்டி வந்தனர். கடந்த சில நாள்களாக வெங்கடேசனை சிலர் நேரில் வந்து மிரட்டிவிட்டுச் சென்றனர். இந்த நிலையில்தான் அவரை ஆறு பேர் கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அளித்த தகவல்களின் பேரில் ரவுடிகள் அஜீத், ரஞ்சித் உள்பட 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அஸ்தம்பட்டி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.