சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள தச்சன் குளத்தினையொட்டிய கரை பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக 80க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். தற்போது வருவாய்த்துறை மற்றும் சிதம்பரம் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் வீடுகளை அகற்றப்படும் என்று அறிவிப்பு செய்துள்ளனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள். தற்போது நிலவி வரும் கரோனா பெருந்தொற்று மற்றும் வடகிழக்கு பருவமழை கடுமையாகப் பெய்து வருவதால் பொதுமக்கள் பெருத்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் நகர் புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆதலால் இப்பகுதியில் வசிக்கும் 80 குடும்பங்களுக்கும் மாற்று இடம் வழங்கிய பின் வீடுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக கால அவகாசம் வழங்கிட வேண்டும் என தட்சன் குளப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுடன் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியைச் சந்தித்து மனு அளித்துள்ளார். இவருடன் மாவட்ட கழக அவைத்தலைவர் எம். எஸ்.என் குமார், மாவட்ட கழக பொருளாளர் தோப்பு கே.சுந்தர், நகர அம்மா பேரவை செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, மாவட்ட அணி பொருளாளர் சங்கர், வார்டு செயலாளர் வீரமணி, நகர இளைஞரணி செயலாளர் கருப்பு ராஜா மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் என அனைவரும் உடனிருந்தனர்.