கடந்த மார்ச் 16 ந் தேதி தஞ்சை மாவட்டத்தில் பரவிய ஒரு ஆடியோ ஒரு சமூகத்தையும் அந்த சமூக பெண்களையும் இழிவாக பேசியதால்புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அந்த சமூக மக்களின் போராட்டத்தை தூண்டியது. 19 ந் தேதி காவல் நிலையம் முற்றுகை, பேருந்துநிலையம் முற்றுகை அனைத்துச் சாலைகளும் முடக்கப்பட்டது. ஆடியோவில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி போலிசார் கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால் அது கலவரமாகி தடியடி கலவீச்சு நடந்துவிட்டது. இந்த சம்பவத்தில் பல போலிஸ் வாகனங்கள் சேதமடைந்தது போலிசார் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.
![Ponnaravarathi riots... Arrest operation begins](http://image.nakkheeran.in/cdn/farfuture/zzeyyZm3qOpfjmg2NtpAVvldqnKKCZfzEWi-1uJNl78/1559275813/sites/default/files/inline-images/442226_5511702_2_updates-11.jpg)
இந்த சம்பவம் அறிந்து பல கிராமங்களிலும் சாலை மறியல் போராட்டங்கள் தொடங்கயதால் போராட்டத்தைக் கட்டுப்படுத்த 49 வருவாய் கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. அதன் பிறகு சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் என தமிழகத்தின் பல பகுதிகளிலும் அந்த சமூக பெண்களும் இளைஞர்களும் போராட்டங்களை நடத்தினார்கள்.
இந்த நிலையில் தான் பொன்னமராவதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக பிடிக்கப்பட் சிலரை போலிசார் விடுவித்தனர். ஆனால் அப்போதே சுமார் 1000 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அப்போது குறிபபிட்ட சமுதாய தலைவர்கள் கைது நடவடிக்கை எடுக்க கூடாது என்று பேச்சாவார்த்தை நடத்தினார்கள்.
![Ponnaravarathi riots... Arrest operation begins](http://image.nakkheeran.in/cdn/farfuture/ndWvaUUOaJ6weaFEzHSI4CY4R7TNIDIT8RGOuuLqRUs/1559275834/sites/default/files/inline-images/ponnamaravathi6_1.jpg)
அதன் பிறகு சம்மந்தப்பட்ட ஆடியோவை தேர்தல் ஆதாயத்திற்காக தஞ்சை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நிறுத்தப்பட்டவரை வெற்றி பெறச் செய்ய அதே சமூக இளைஞர்களே சிங்கப்பூரில் இருந்து பேசி தஞ்சை மாவட்டத்திற்கு அனுப்பி அங்கிருந்து சமூக வலைதளங்கள் மூலம் மற்ற பகுதிகளுக்கு பரப்பிவிடப்பட்டதை கண்டறிந்த போலிசார் சம்மந்தப்பட்டவர்களை சிங்கப்பூரில் இருந்து வரவழைத்து கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் சம்மந்தப்பட்ட ஆடியோவை பரப்பியதாகவும் ஆடியோ வெளியாக காரணமாக இருந்ததாகவும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு போராட்டங்கள் குறைந்தது. இந்தநிலையில் தான் வியாழக்கிழமை இரவு முதல் பொன்னமராவதில் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி ஆலவயல், வார்ப்பட்டு, தேவன்பட்டி, கொல்லுப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து 22 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் கைது நடவடிக்கைகள் தொடர வாய்ப்புகள் உள்ளதால் மீண்டும் பொன்னமராவதி பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது.