Skip to main content

 புதிய  சபாநாயகராக சிவக்கொழுந்து தேர்வு! தேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு! 

Published on 02/06/2019 | Edited on 02/06/2019

 


புதுச்சேரி சபாநாயகராக இருந்து வந்த வெ.வைத்திலிங்கம் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக அவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை நாளை கூட உள்ள நிலையில் சபாநாயகர் பதவிக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தால் அன்றைய தினமே குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று புதுச்சேரி சட்டப்பேரவை செயலர் வின்சென்ட்ராயர் தெரிவித்திருந்தார்.

 

p

 

இந்நிலையில்  இன்று முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ், தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சிவக்கொழுந்து சபாநாயகர் வேட்பாளராக முன்மொழியப் பட்டதை தொடர்ந்து அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.   வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதைத் தொடர்ந்து, வேறு யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில் புதுச்சேரி சபாநாயகராக முன்னாள் துணை சபாநயாகர் வி.பி. சிவக்கொழுந்து ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.  நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகராக வி.பி.சிவக்கொழுந்து பதவி ஏற்பார்.

 

அதேசமயம் உரிய கால அவகாசம் கொடுக்காமல் சபாநாயகர் தேர்தலை நடத்துவதாக கூறி என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  நாளை நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கும்  என்று அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

 

அதேபோல் குறுகிய காலத்தில் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவதாகவும், அதை நிறுத்தி விட்டு, ஒரு வார காலத்திற்கு பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன், என்.ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் மனு அளித்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்