தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தபோதே டாஸ்மாக் கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மது விற்க திட்டமிட்ட பலரும் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். டாஸ்மாக் கடை வாசலில் நின்றே போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பலர் மதுபாட்டில்களைக் கொண்டு சென்று பதுக்கிவைத்து, கூடுதல் விலைக்கு விற்றனர். மற்றொரு பக்கம் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் தொடர்ந்துள்ளது.
இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை டி.எஸ்.பி சரகம் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பல ஆயிரம் மது பாட்டில்களை ஆய்வாளர் அனிதா கிரேசி தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களைக் காவல் நிலையம் கொண்டு வந்தபோதும் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதேபோல் மே 8ஆம் தேதி 434 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், அவற்றையும் கணக்கில் காட்டாமல் பறிமுதல் செய்தவர்களிடமும் மேலும் சில மது விற்பனையாளர்களிடமும் புரோக்கர்கள் மூலம் ஒரு குவாட்டர் ரூ. 500 என கள்ளத்தனமாக விற்பனை செய்துள்ளனர்.
இந்த தகவல் வெளியே கசிய, பட்டுக்கோட்டை டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் விசாரனை செய்தபோது ஆய்வாளர் அனிதா கிரேசி, உதவி ஆய்வாளர் ராஜ்மோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் துரையரசன், தலைமை காவலர் ராமமூர்த்தி ஆகியோர் மது விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், காவல் நிலைய சிசிடிவி கேமராக்களிலும் பதிவாகியுள்ளது. இந்த தகவல் தஞ்சையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.ஐ.ஜி பிரவேஷ்குமாருக்கு சென்ற நிலையில், காவல் ஆய்வாளர் உள்பட 4 பேரையும் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்மந்தப்பட்டவர்கள் பற்றிய விசாரணையும் நடந்துவருகிறது. கள்ள மது வியாபாரிகளிடம் பறிமுதல் செய்த மது பாட்டில்களைக் காவல் நிலையத்தில் வைத்தே கள்ளத்தனமாக விற்பனை செய்து மாட்டிக்கொண்டு சஸ்பென்ட் ஆகியுள்ள பெண் ஆய்வாளர் மற்றும் போலீசாரை பொதுமக்கள் வேறு விதமாக பேசிவருகின்றனர்.