தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்ற பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்கக் கூடாது என்று தொடர்ந்து காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தனிப்படை காவலர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பால்பண்ணை அருகே உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பான்மசாலா, குட்கா, புகையிலை உள்ளிட்டவற்றை தனிப் படையினர் பறிமுதல் செய்தனர்.
அதில் மொத்தம் இருபத்தி ஏழு மூட்டைகளில் 550 கிலோ அளவுள்ள குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று காவல்துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமையாளர் ராஜேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருட்களைப் பதுக்கிவைத்து இருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.