Skip to main content

'அவர்களுக்குப் போலீசார் தொந்தரவு தரகூடாது' - ஐகோர்ட் கிளை உத்தரவு

Published on 01/06/2018 | Edited on 01/06/2018
tut

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டில் குற்றம் சாட்டபட்டவர்களின் குடும்பங்களுக்கு போலீசார் தொந்தரவு தரக்கூடாது என சட்ட உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் தங்கப்பாண்டி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ’’ நான் நெல்லை மாவட்ட மக்கள் அதிகார அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். மே 22 ஆம் தேதி நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டேன். இந்த போராட்டத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

 

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் பலபேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு அழைக்கும் பொருட்டு அவருக்கு முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆனால்  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை போலீசார் விசாரணை என்ற பெயரில் நள்ளிரவு நேரங்களில் கூட துன்புறுத்தல் செய்கின்றனர். மேலும் போலீசார் விசாரணை என்ற பெயரில் தங்களது குடும்பங்களை சேர்ந்தவர்கள் மற்றும் கைகுழந்தைகளை துன்புறுத்துகின்றனர். குறிப்பாக மக்கள் அதிகார அமைப்பினை சேர்ந்த   சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளை சேர்ந்தவர்களை போலீசார் மனிதாபபின்மை இன்றி விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சட்டவிரோதமாக யாரையும் கைது செய்ய கூடாது, துன்புறுத்த கூடாது. விசாரணை தொடர்பாக எத்தனை பேருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு இன்று நீதிபதி முரளிதரன், நீதிபதி கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது,  " தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டில் குற்றம் சாட்டபட்டவர்களின் குடும்பங்களுக்கு விசாரணை என்ற பெயரில் போலீசார் தொந்தரவு தரகூடாது" என உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்