விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகரப் பகுதியில் சிறுவர்கள் அதிக அளவில் பிச்சை எடுப்பதாக காவல்துறைக்கு அவ்வப்போது தகவல் வந்தபடி இருந்தது.
இதையடுத்து கடந்த 1ஆம் தேதி முதல், ‘ஆபரேஷன் ஸ்மைல்’ என்ற பெயரில் காவல்துறையினர், குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சை எடுக்கும் குழந்தைகள், பெண் பிள்ளைகள் ஆகியோரை கண்டறிந்து விழுப்புரம், குழந்தைகள் நல மையத்தில் ஒப்படைத்து வருகிறார்கள்.
அதன் அடிப்படையில் திண்டிவனம் டி.எஸ்.பி. கணேசன் தலைமையில், தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் ராமு, அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் புனிதா, திண்டிவனம் உதவி ஆய்வாளர் தமிழ்மணி, காவலர் ராதா, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட சமூகப் பணியாளர் பிரகாஷ், மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் திண்டிவனம் உட்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதியில் பிச்சை எடுத்துவந்த கலசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 8 குழந்தைகள் உட்பட 12 பேரைக் கண்டறிந்து அவர்கள் அனைவரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் டி.எஸ்.பி. கணேசன், அறிவுரை கூறி, “இது போன்று பிச்சை எடுக்கக்கூடாது. படித்து வாழ்க்கையில் உயர வேண்டும். அதற்காக அரசு உங்களுக்கு நிறைய உதவிகளைச் செய்துவருகிறது, செய்யத் தயாராக உள்ளது” என்று அறிவுரை வழங்கினார். மேலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அவர்களுக்கான உதவிகளைச் செய்யுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.