மதுரை தினமலர் அலுவலகத்துக்கு வெளியே பாதுகாப்புக்காக காவல்துறையினர் 4 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர். ‘எதுவும் விவகாரமா? ஏன் இந்த பாதுகாப்பு நடவடிக்கை?’ என்று கேட்டோம், அந்த நாளிதழ் வட்டாரத்தில். “அதுவந்து.. நடிகர் கட்சி ஆளுங்க தொடர்ந்து மிரட்டுறாங்க. எங்க பத்திரிகைல செய்தி போட்டோம். அது அவங்களுக்கு பிடிக்கலயாம். அதனாலதான்.. தொடர்ந்து மிரட்டல்.” என்றனர்.
‘நடிகர் கட்சின்னு பொத்தாம் பொதுவா சொன்னா எப்படி? தமிழ்நாட்டுல டி.ராஜேந்தர் தொடங்கி கமல்ஹாசன் வரைக்கும் கட்சி வச்சிருக்காங்க. எந்த நடிகர்ன்னு எப்படி தெரிஞ்சிக்கிறது?’ என்றதும், “சினிமால மாதிரியேதான்.. சட்டமன்றத்துலயும் நாக்கை துருத்தி பேசினாரு. பொதுக்கூட்ட மேடையிலும் கூட கோபத்துல கண்டமேனிக்கு பேசிருக்காரு. ஒருதடவை.. பத்திரிகைக்காரங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம.. த்தூ-ன்னு துப்பி பெரிய விவகாரமாச்சு. அவங்க வீட்டுக்காரம்மாவும், பிரஸ் மீட்ல.. பத்திரிகையாளர்களை.. நீ.. வா.. போ..ன்னு ஒருமையில பேசினவங்கதான். தலைமையே இப்படியிருந்தா.. தொண்டர்கள் எப்படியிருப்பாங்க? பத்திரிகை ஆபீஸ மிரட்டுறதெல்லாம் அவங்களுக்கு சர்வ சாதாரணம்ங்க..” என்று சீரியஸாக பேசினார்கள்.
தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை ‘மிரட்டல்’ என்று சினிமாவிலும் கூட அந்த நடிகர் வசனம் பேசியதில்லை.