Skip to main content

சென்னையை சேர்ந்த போலி வக்கீல் சேலத்தில் கைது!

Published on 09/10/2018 | Edited on 09/10/2018
rain


சென்னையைச் சேர்ந்த போலி வழக்கறிஞர் சேலத்தில் இன்று (அக்டோபர் 9, 2018) கைது செய்யப்பட்டார். 


சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை வழக்கறிஞர் எனக்கூறிக் கொண்டு, நீதிமன்றங்களில் வழங்குகளில் ஆஜராகி வந்துள்ளார். இந்நிலையில், சேலத்தில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குற்றவாளி ஒருவருக்கு முன்ஜாமின் பெறுவதற்காக மாவட்ட மகளிர் நீதிமன்றத்திற்கு இன்று வந்தார். 


அப்போது குற்றவாளிக்கு ஆதரவாக அவர் கொடுத்த பிறப்புச்சான்றிதழில் சந்தேகம் ஏற்பட்டதால், அதுகுறித்து விசாரிக்க மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கு தொடர்பாக அவர் கொடுத்த பல்வேறு தகவல்களும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 


இதுகுறித்து அரசுத்தரப்பு வழக்கறிஞர் அய்யப்பமணி, சம்பந்தப்பட்ட நபரிடம் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியுள்ளார். அலகாபாத் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளதாக ராமகிருஷ்ணன் கூறியதுடன், தன்னுடைய பதிவு எண் 7123/1998 என்றும் கூறியுள்ளார். 


இதையடுத்து அலகாபாத் பார் கவுன்சிலில் இணையதளத்தை ஆய்வு செய்தபோது அந்த ஆண்டில் 4909 வழக்கறிஞர்கள்தான் பதிவு செய்திருப்பதும், ராமகிருஷ்ணன் பெயர் அந்த பட்டியலில் இல்லை என்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பிலும் ராமகிருஷ்ணனிடம் விசாரித்தனர். 


இதையடுத்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சேலம் அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ராமகிருஷ்ணனை போலீசார் இன்று கைது செய்தனர். போலீசார் விசாரணையில், ராமகிருஷ்ணன் பட்டப்படிப்பு மட்டுமே படித்திருப்பதும், பல்வேறு ஊர்களில் வழக்கறிஞர் எனக்கூறிக்கொண்டு வழக்குகளில் ஆஜராகி வந்திருப்பதும், அதன்மூலம் லட்சக்கணக்கில் பலரிடம் பணம் கறந்திருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்