உளுந்துார்பேட்டையை அடுத்த எதலவாடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசுக்குத் தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., மணிமொழியன் தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் (02.09.2021) இரவு 10:00 மணிக்கு அங்கு சென்றனர். குடோனில் இருந்து டாரஸ் லாரியில், ரேஷன் அரிசியை ஏற்றியவர்களைப் பிடித்து விசாரித்தனர். எறையூரைச் சேர்ந்த அந்தோணிசாமி மனைவி மாசிலாராணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இங்கு கோழித்தீவனம் வைக்கப் போவதாகக் கூறி, உளுந்தூர்பேட்டை - திருச்சி சாலையில் உள்ள இப்ராஹிம் சுகர்னா என்பவர் மாதம் 5,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துள்ளார். இங்கு ரேஷன் அரிசியைப் பதுக்கி, நாமக்கல் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, லாரி டிரைவர் சக்திவேல் (35), சிவப்பிரகாசம் (29), ராமமூர்த்தி (25), முத்து (45), நில உரிமையாளர் மாசிலாராணி (47) ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
குடோனில் இருந்த 25 டன் ரேஷன் அரிசி மூட்டைகள், டாரஸ் லாரி, பொலீரோ பிக்கப், இரண்டு பைக்குகள், மூன்று மொபைல் ஃபோன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். கடத்தலில் முக்கியப் புள்ளியான இப்ராஹிம் சுகர்னாவை தேடிவருகின்றனர். இவர், இரண்டு மாதங்களுக்கு முன், ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.