
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ப. முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வீடு கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் தொழில் நிமித்தமாக தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வாழ்ந்து வருகின்ற நிலையில், இரவு அடையாளம் தெரியாத நபர்கள் ப.முத்தம்பட்டியில் உள்ள சந்திரனின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 30 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
வீட்டைப் பராமரித்து வந்த சந்திரனின் மாமியார், இன்று காலை வீட்டைச் சுத்தம் செய்வதற்காக வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் செந்தில் தலைமையிலான போலீசார் பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர். மேலும் தனிப்படை அமைத்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் அடுத்த தாயப்பன் நகரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஜெயசுரேஷ் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 40 சவரன் நகை மற்றும் சீட்டு கட்டி எடுத்து வைக்கப்பட்டிருந்த 9 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போயிருந்தது. தீபாவளி சமயத்தில் இப்படி அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் நடக்கின்றன. கொள்ளையர்களைப் பிடிக்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது.