Skip to main content

புழல் கைதியின் கை உடைப்பு! சிறைத்துறையை மிரட்டிய காவல்துறை! 

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
sathish


கைதியை சிறையில் அடைப்பது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகளையே காவல்துறை மிரட்டிய சம்பவம் பரபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
 

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, பெண்ணிடம் பழகி நகை பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக புழல் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார் இன்ஜினியர் கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி. விசாரணையில் கிருஷ்ணமூர்த்தியின் கையை அடித்து உடைத்திருக்கிறது போலீஸ். இதனால், அரசு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர் புழல் கிரைம் போலிஸார்.

 

 


பரிசோதித்த அரசு ஸ்டேன்லி மருத்துவர்களோ, ‘கிருஷ்ணமூர்த்தியின் கை உடைந்து எலும்பு முறிந்துள்ளது. அதனால், கிருஷ்ணமூர்த்தியை உள்நோயாளியாக அட்மிட் செய்து, ஆர்த்தோ டாக்டரிடம் சிகிச்சை பெற்று அவரது பரிந்துரைக்கு பிறகு அழைத்துசெல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், எலும்புமுறிவு மருத்துவரிடம் சிகிச்சை பெற்றால் கை உடைக்கப்பட்டது ஆதாரத்துடன் வெளியில் தெரிந்துவிடும் என்பதால் எங்கோ அழைத்துச்சென்று மாவு கட்டுப்போட்டு இரவு 2 மணிக்கு புழல் மத்திய சிறையில் அடைக்க வந்திருக்கிறார் எஸ்.ஐ. சதீஷ்.
 

அதற்குப்பிறகு என்ன நடந்தது? நம்மிடம் பேசும் சிறைத்துறை அதிகாரிகளோ, “கடந்த 25ந் தேதி 2 மணிக்கு கைதியின் இடது கை உடைக்கப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கும் சூழலில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமலேயே அழைத்து வந்தார் எஸ்.ஐ. சதீஷ்.  மருத்துவமனையின் ஓ.பி. சீட்டில் குறிப்பிட்டிருப்பதுபோல ஆர்த்தோ டாக்டரிடம் சிகிச்சை அளித்துவிட்டு அதற்கான மருத்துவச்சான்றுகளோடு வாருங்கள் என்றுதான் சொன்னோம். 

 

sathish


உடனே, சிறை அதிகாரிகளையும், நர்ஸிங் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட சிறை பணியார்களை மிரட்ட ஆரம்பித்துவிட்டார் புழல் எஸ்.ஐ. சதீஷ். நர்ஸிங் அஸிஸ்டெண்டை பார்த்து, ’உன் பையன் கான்ஸ்டபிளாதானே இருக்கான். அவன்மேல கேஸை போட்டு தூக்கவா? ஏ.சிக்கிட்ட உங்க டாக்டரையும் தூக்கி உள்ள வெச்சிடுவாரு’ என்று மிரட்டியதோடு உதவி ஆணையர் பிரபாகரனுக்கு ஃபோன் போட்டு கொடுத்திருக்கிறார் எஸ்.ஐ. சதீஷ். உடனே, எஸ்.ஐ. சதீஷின் செல்ஃபோனிலிருந்து அசிஸ்டெண்ட் ஜெயிலர்  பிச்சாண்டியிடம் பேசிய உதவி ஆணையர் பிரபாகரனோ, “இப்பவே, கைதியை சிறையில அடைச்சுடுங்க. புழல் சிறையே எங்க லிமிட்டுலதான் இருக்கு. எங்கக்கிட்டேயே ரூல்ஸ் பேசுறீங்களா? கைதிங்ககிட்ட கைப்பற்றின செல்ஃபோன், கஞ்சாக்களை நீங்கதான் அவனுங்களுக்கு சப்ளை பண்ணுனீங்கன்னு உங்களையே தூக்கி உள்ள வெச்சிடுவோம்.  யார் அந்த டாக்டர்? அவனையும் தூக்கி உள்ள வெச்சிடுவோம்” என்று மிரட்ட…  சிறை மருத்துவர் நவீன் குமாரிடம் ஃபோனில் தகவல் தெரிவிக்காமலேயே  கைதியை சிறையில் அடைத்துவிட்டோம். பின்னாளில், ’என் கை உடஞ்ச சூழ்நிலையிலும் மருத்துவ சிகிச்சை கொடுக்காம கொண்டு வந்து சிறையில அடைச்சுடுச்சு போலீஸுன்னு கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி மனித உரிமை ஆணையத்துக்கோ கோர்ட்டுக்கோ போனா எல்லாருக்கும் பிரச்சனை” என்கிறார்கள் வேதனையோடு. திறமையான ஏ.சின்னு பெயர் எடுத்தவர் பிரபாகரன். ஆனா, எஸ்.ஐ சதீஷ்தான் அவர்க்கிட்ட தப்பு தப்பா போட்டுக்கொடுத்து இப்படி ஆக்கிட்டார் என்கிறது புழல் கிரைம் டீம்.
 

மிரட்டல் சர்ச்சை எஸ்.ஐ. சதீஷ்குமாரை தொடர்புகொண்டு கேட்டபோது, “சிறைத்துறை அதிகாரிகளை சாதாரண எஸ்.ஐ. நான் மிரட்டமுடியுமா சார்? கைதியை மருத்துவமனைக்கு அழைத்துசென்ற டீம் வேற. நான், சட்டம் ஒழுங்கு எஸ்.ஐ. சார். ஏ.சி. சொன்னாரேன்னுதான் கைதியை கூட்டிக்கிட்டுப்போனேன். வேற என்ன மருத்துவ சான்றிதழ் வேணும்னுதான் கேட்டேனே தவிர மற்றபடி நான் மிரட்டவே இல்லை” என்றார்.
 

 

 

ஏ.சி.பிரபாகரனை தொடர்புகொண்டு கேட்டபோது, அப்படியொரு சம்பவம் நடந்ததா? என்பதுபோல நம்மிடம் பேசி மறுத்தார். இந்நிலையில், இதுகுறித்து எஸ்.ஐ. சதீஷ் மீதும் ஏ.சி. பிரபாகரன் மீது டி.சி. கலைச்செல்வனிடம் புகார் கொடுத்திருக்கிறார் புழல் சிறை மருத்துவர் நவீன் குமார். இதுகுறித்து, அவரிடம் கேட்டபோது, “கலைச்செல்வன் சார் நியாயமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்னு சொல்லியிருக்காரு” என்று முடித்துக்கொண்டார்.
 

    சிறைத்துறைக்கும் காவல்துறைக்கும் நடந்த மோதலால் கைதியின் கை உடைப்பு சம்பவம் வெளியாகியிருக்கிறது. ஏமாற்றிய கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால், கையை உடைத்தது மட்டுமில்லாமல் மருத்துவ சிகிச்சையும் அளிக்காதது அப்பட்டமான மனித உரிமை மீறல்.  

 

 


 

சார்ந்த செய்திகள்