தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் துத்திப்பட்டு பஜனை கோவில் பகுதியை சேர்ந்த விமல்ராஜ் (வயது 48). இவரது மனைவி உஷா. இந்த தம்பதியருக்கு இரு மகன்கள் மற்றும் ஸ்ரீநித்யா (வயது18) என்ற ஒரு மகளும் உண்டு. ஸ்ரீநித்யா 12 ஆம் வகுப்பில் கணினி அறிவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுதிய நிலையில் நேற்று முன்தினம் வெளியான தேர்வு முடிவில் ஸ்ரீநித்யா பாஸ் ஆகி உள்ளார். இருப்பினும் குறைவான மதிப்பெண்களே எடுத்திருந்ததால் விரக்தியடைந்து காணப்பட்ட நிலையில் தேர்வு முடிவு வெளியான அன்று மாலையே வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட குடும்பத்தினர் ஸ்ரீநித்யாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று காஞ்சிபுரம் மாவட்டம் முருகாத்தம்மன்பேட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 50) என்பவருடைய மகள் கீர்த்திகா (வயது 17). இவர் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவு தேர்ந்தெடுத்து படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியான தேர்வு முடிவில் கீர்த்திகா அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று 384 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இருப்பினும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண் கிடைக்காததால் கீர்த்திகா மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெற்றோர் உறங்கி நேற்று காலையில் வழக்கம் போல் எழுந்து பார்த்தபோது கீர்த்திகா தூக்கிட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் கீர்த்திகாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதிப்பெண்கள் குறைந்ததால் மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.