சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதியிடம் அலைப்பேசி, சிம் கார்டு, சார்ஜர் ஆகியவற்றை சிறைத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் என 800க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள் அரசியல் பலம், பண பலம் உள்ள கைதிகள் மற்றும் ரவுடிகள் சிலர் தடை உத்தரவை மீறி அலைப்பேசிகளைப் பயன்படுத்தி வருவதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கைதிகளின் அறைகளில் சிறைக்காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, தண்டனைக் கைதி ஜனார்த்தனன் என்பவரிடம் இருந்து ஒரு அலைப்பேசி, ஒரு சார்ஜர், சிம் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவருக்கு அலைப்பேசி கொடுத்தது யார்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து சிறைக்காவலர்கள் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சிம் கார்டு மூலம், கைதி ஜனார்த்தனன் யார் யாரிடம் பேசினார்? என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. கைதியிடம் அலைப்பேசி பிடிபட்ட சம்பவம், மற்ற கைதிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.